வழிபாடு

மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-25)

Published On 2025-01-09 08:21 IST   |   Update On 2025-01-09 08:21:00 IST
  • எங்களிடம் மிகுந்த கருணையுடைய ஒப்புயர்வற்ற கண்ணனே!
  • உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்தருள்வாய்!

திருப்பாவை

பாடல்:

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

தரிக்கிலா னாகித்தான்த்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம்; பறைதருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

விளக்கம்:

எங்களிடம் மிகுந்த கருணையுடைய ஒப்புயர்வற்ற கண்ணனே! ஒப்பற்ற தேவகியின் மகனாய்ப் பிறந்து, பிறந்த அதே இரவில் வேறொருத்தியான யசோ தையின் மகனாக மாற்றப்பட்டு மறைந்து வளர்ந்தாய்! ஆணவத்தால் உன்னை அழிக்க நினைத்த கம்சனின் வஞ்சகத்தை தோற்கடித்து, அவனது வயிற்றில் நெருப்பாக நின்ற பெருமானே! உன்னை நாடி வந்திருக்கிறோம். நோன்புக்குத் தேவையான அருளை நீ தருவாயானால், உனது அருட்செல்வத்தையும், தொண்டினையும் பாடுவோம். வருத்தம் நீங்கி மகிழ்ந்திருப்போம்.

திருவெம்பாவை

பாடல்:

பூதங்கள் தோறும்நின்றாய் எனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறியோம்உனைக் கண்டறி வாரைச்

சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!

சிந்தனைக் கும்அரியாய்! எங்கள் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

எம் பெருமான்! பள்ளி எழுந்தரு ளாயே!

விளக்கம்:

திருப்பெருந்துறையில் வாழ்கின்ற அரசே! பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றிலும் நிறைந்து, பிறப்பும் - இறப்பும் இல்லாதவன் என்று புலவர்கள் உன்னைப் புகழ்ந்து பாடுவதை நாங்கள் கேட்டறிந்துள்ளோம். ஆனால் உன்னைக் கண்டறிந்தவர்கள் பற்றி நாங்கள் அறிந்ததில்லை. குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையின் மன்னவனே! எங்கள் முன் வந்து நாங்கள் செய்யும் தவறுகளை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள்புரிகின்ற எமது தலைவனே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்தருள்வாய்! 

Tags:    

Similar News