நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபட காளியம்மன் வழிபாடு!
- நவக்கிரக பாதிப்பிற்கு நம்முடைய கர்மவினைகள் தான் காரணமாக அமைகிறது.
- 18 வாரங்கள் காளியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் நவக்கிரகங்களின் அமைப்பு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்த நவக்கிரகங்களின் அமைப்பிற்கு ஏற்றார் போல் தான், நம்முடைய வாழ்க்கையும் அமையும்.
இந்த நவக்கிரகங்களின் அமைப்பு ஏற்படுவதற்கு நம்முடைய கர்மவினைகள் தான் காரணமாக திகழ்கிறது. நம்முடைய கர்ம வினைகளை நீக்குவதற்கும், அதே சமயம் நவகிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைவதற்கும் செய்யக்கூடிய காளியம்மன் வழிபாடு குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகமும் எந்தெந்த இடத்தில் அமைந்தால் நற்பலன்கள் கிடைக்கும், நன்மை தடைபடும். தோஷம் உண்டாகும். துன்பங்கள் அதிகரிக்கும். என்று பல விதிமுறைகள் ஜோதிடத்தில் இருக்கிறது.
எப்பேர்ப்பட்ட கிரகமாக இருந்தாலும் அது எந்த கிரகத்தைப் பார்த்தாலும் அந்த கிரகத்திற்குரிய பாதிப்பை கண்டிப்பான முறையில் நாம் அனுபவித்து தான் தீர வேண்டும். இந்த நவக்கிர கங்களின் பாதிப்பால் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கு காளியம்மனை எப்படி வழிபாடு செய்வது என்று பார்ப்போம்.
செவ்வாய்க்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய காளியம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு செல்வதற்கு முன்பாக அங்கு தீபம் ஏற்றுவதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தீபம் ஏற்றுவதற்கு வேப்ப எண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் மஞ்சள் நிற காட்டன் துணியை வாங்கி வந்து, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அந்த பாத்திரத்தை இறக்கி வைத்து நாம் வாங்கிவைத்திருக்கும் மஞ்சள் துணியை அதில் மூழ்கும்படி வைத்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து அதை எடுத்து நன்றாக தண்ணீரை பிழிந்து காய வைத்து எடுக்க வேண்டும். பிறகு சுத்தமான பன்னீரில் நனைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த துணியில் தான் நாம் திரியை தயார் செய்து தீபம் ஏற்ற வேண்டும். எவ்வளவு பெரிய திரி வேண்டுமோ அவ்வளவு பெரியதாக அதை வெட்டி திரியாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதேபோல் காளியம்மனுக்கு தங்க அரளிப் பூவை பறித்து மாலையாக தொடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அருகில் இருக்கக்கூடிய காளியம்மன் ஆலயத்திற்கு தொடுத்து வைத்திருந்த தங்க அரளிப்பூ, வேப்ப எண்ணெய், மஞ்சள் திரி, மூன்று அகல் விளக்குகளையும் வாங்கிக்கொண்டு செல்லவேண்டும்.
மலரை அம்மனுக்கு சாற்றச் சொல்லி கொடுத்து விட வேண்டும். அம்மனுக்கு முன்பாக மூன்றாக விளக்குகளை வைத்து அதில் வேப்ப எண்ணெய்யை ஊற்றி நாம் தயார் செய்துவைத்திருக்கும் திரியை போட்டு மூன்று திரிகளும் ஒன்றாக இருப்பது போல் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
இப்படி தொடர்ந்து 18 வாரங்கள் நாம் காளியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைய ஆரம்பிக்கும்.
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமான காளியம்மனை முழு மனதுடன் நம்பி இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபடலாம்.