வழிபாடு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம்

Published On 2025-03-03 10:33 IST   |   Update On 2025-03-03 10:33:00 IST
  • பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
  • தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.

மேல்மலையனூர்:

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் நாள் மயானக்கொள்ளை விழா விமரிசையாக நடந்தது.

விழாவின் 5-வது நாளான நேற் று தீமிதி திருவிழா நடைபெற் றது. இதை யொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறை யில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

உற்சவர் அம்மனை பிற்பகல் 2 மணியளவில் பல்லக்கில் பூசாரிகள் அக்னி குளத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு பம்பை , மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று மாலை 4 மணியளவில் அக்னி குண்டம் முன்பு அம்மன் எழுந்தருளினார்.

தொடர்ந்து பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்பு அம்மனுக்கும், அக்னி குண்டத்திற்கும் தீபாராதனை காட்டிய உடன் தீக்குழிக்குள் பூ உருண்டையை உருட்டிவிட்டு தலைமை பூசாரி மற்றும் பூசாரிகள் தீக்குழிக்குள் இறங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சில பக்தர்கள் இரும்பு கொக்கிகளை முதுகில் அலகு குத்தி லாரி, வேன் ஆகியவற்றை இழுத்தும், அந்தரத்தில் தொங்கியவாறு பறவை க் காவடி எடுத்தும் அம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவில் அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள், ஏழு வம்சாவழியை சேர்ந்த மீனவ முறை பூசாரிகள் குடும்பத்தினர் செய்திருந்தனர். மேல்மலையனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையில் ஏராளமான போலீசாரும், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழாவின் 6-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

Tags:    

Similar News