வழிபாடு

திருச்செந்தூரில் மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்: 12-ந்தேதி தேரோட்டம்

Published On 2025-03-02 10:04 IST   |   Update On 2025-03-02 10:04:00 IST
  • கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.
  • காலை 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி பெரும் திருவிழா விமர்சையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான மாசி பெரும் திருவிழா நாளை (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடி யேற்றத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதியுலா நடக்கிறது. நாளை (3-ந்தேதி) கொடியேற்றம் நடக்கிறது.

இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

2-ம் திருவிழாவான 4-ந்தேதி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரானை, இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

3,4,5,6-ம் திருவிழா நாட்களில் கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வருபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.

5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு மேல் குடைவருவாயில் தீபாராதனை நடக்கிறது.

6-ம் திருவிழா அன்று காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. அன்று இரவு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் எந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

7-ம்திருவிழாவான 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்கிறது.

காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 4.20 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.

8,10,11,12-ம் ஆகிய திருவிழா நாட்களில் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது

8-ம் திருவிழாவான 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் கோவிலில் சேர்க்கையை பொறுத்து பூஜை நேரங்கள் மாறுபடும்.

10-ம்திருவிழாவான 12-ந்தேதி காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

12-ம் திருவிழாவான 14-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News