வழிபாடு

குதிரை நடனமாடி முன்வர பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி கொண்டு வந்தபோது எடுத்த படம்.




பொங்கலூர் அருகே மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2023-02-09 05:18 GMT   |   Update On 2023-02-09 05:18 GMT
  • இன்று மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக வேள்வி நடக்கிறது.
  • 7-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

பொங்கலூர் அருகே தெற்கு அவினாசிபாளையத்திற்கு உட்பட்ட எஸ்.வேலாயுதம்பாளையத்தில் சித்தி விநாயகர், மகா மாரியம்மன், வேலாயுதசாமி மற்றும் போத்த ராஜா கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாரானது. இதையடுத்து யாக சாலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது.

கடந்த 7-ந் தேதி காலை 8.30 மணிக்கு கிராம சாந்தி வழிபாடு மற்றும் வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, கஜ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து தெய்வ விக்கிரகங்களுக்கு ப்ரசன்னா அபிஷேகம், கண் திறத்தல், அம்பிகை சிலை கிராம வலம் வருதல் ஆகியன நடைபெற்றது. மாலை 3 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் குதிரை, காளை, பசுவுடன் முளைப்பாரி எடுத்தபடி பெண்கள் ஊர்வலமாக வந்தனர். மாலை 5 மணிக்கு முதல்கால யாக வேள்வி தொடங்கியது. இரவு 9 மணிக்கு பவளக்கொடி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால வேள்வியும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக வேள்வியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நாளை காலை 5.30 மணிக்கு 4-ம் கால யாக வேள்வியும் முடிவுற்று, 8.45 மணிக்கு ஸ்ரீ விநாயகர் கோவில் விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் மகா மாரியம்மன் கோவில் விமான கோபுரம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவிற்கு கொங்குநாடுமுன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமை தாங்குகிறார். திருப்பூர் ஸ்போர்ட்ஸ் அண்ட் பிட்னஸ் அகாடமியின் தலைவர் என்.எம். ராமசாமி வரவேற்று பேசுகிறார். விழாவில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், எம்.எல்.ஏ-க்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், செல்வராஜ், திருப்பூர் மேயர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

Tags:    

Similar News