மண்டல பூஜை நாளையுடன் முடிகிறது: ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவித்து வழிபாடு
- இதுவரை சபரிமலைக்கு 30 லட்சத்து 87 ஆயிரத்து 49 பக்தர்கள் வந்துள்ளனர்.
- மண்டல பூஜை நாளை (26-ந்தேதி) மதியம் 12 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இநத ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலை அணிந்து விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
நேற்று முன்தினம் (23-ந்தேதி) வரை சபரிமலைக்கு 30 லட்சத்து 87 ஆயிரத்து 49 பக்தர்கள் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 4.46 லட்சம் அதிகமாகும்.
இந்தநிலையில் மண்டல பூஜை நாளை (26-ந்தேதி) மதியம் 12 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சாமி தரிசனம் செய்ய மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) முறைப்படி இன்று 50 ஆயிரம் பக்தர்களுக்கும், நாளை 60 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப் படுகின்றனர்.
மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இதற்காக ஐயப்பனுக்கு அணி விக்கப்படும். தங்க அங்கி ஊர்வலம் கடந்த 22-ந்தேதி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது.
அந்த ஊர்வலம் இன்று பிற்பகலில் பம்பையை வந்தடைகிறது. அதனை கேரள மாநில தேவசம்போர்டு மந்திரி வாசவன் வரவேற்கிறார். அதன்பிறகு தங்க அங்கி ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணி அளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.
மாலை 6.15 மணியளவில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. ஐயப்பன் தங்க அங்கியில் நாளை வரை பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். பின்பு மண்டல பூஜை முடிந்து நாளை இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
தங்க அங்கி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற கட்டுப்பாடுகள் அணிவிக்கப்பட்டுள்ளன. ஊர்வலம் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லும் போது பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
தங்க அங்கி ஊர்வலம் மாலை 5 மணிக்கு சரங்குத்தியை அடைந்ததும், பம்பையில் இருந்து மலையேறிச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜை முடிந்து நாளை இரவு 11 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்பு மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை நடைபெறும் தினத்திலும் பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் கடை பிடிக்கப்பட உள்ளன.
ஜனவரி 13-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களும், 14-ந்தேதி 40 ஆயிரம் பக்தர்களும் மெய்நிகர் வரிசை முறையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.