மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-3)
- திரிவிக்ரமனாக உலகைத் தன் திருவடியில் அளந்த உத்தமனானவர் திருமால்.
- நாடெல்லாம் எந்தவிதத் தீங்கும் நிகழாமல் நல்ல மழை பெய்யும்.
திருப்பாவை
பாடல்:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்கு, சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல்உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
விளக்கம்:
மாபலி மன்னனிடம் வாமனனாய் மூன்றடி மண் கேட்டு, திரிவிக்ரமனாக உலகைத் தன் திருவடியில் அளந்த உத்தமனானவர் திருமால். அவரின் திருநாமங்களைப் பாடியபடியே பாவை நோன்பு நோற்று நாம் நீராடினால், நாடெல்லாம் எந்தவிதத் தீங்கும் நிகழாமல் நல்ல மழை பெய்யும். அதனால் நிலவளம், நீர்வளம் பெருகி, ஒங்கி வளரும் செந்நெல் வயல்களுக்கிடையே கயல் மீன்கள் குதித்து விளையாடும். குவளை மலர்களில் அழகிய வண்டுகள் உறங்கும். மடியைப் பற்றி இழுத்தவுடன் வற்றாத பால் செல்வத்தை தன்னுள்ளே கொண்டுள்ள வள்ளல் பெரும் பசுக்கள் பாற்குடங்களை நிரப்பும். ஆக அழிவற்ற நிலைத்த செல்வம் நிறைந்து விளங்கும்.
திருவெம்பாவை
பாடல்:
முத்தென்ன வெண்நகையாய்! முன்வந் தெதிர்எழுந்தென்
அந்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர்! ஈசன் பழவடியீர்! பாங்குடையீர்;
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற்
பொல்லாதோ?
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!
விளக்கம்:
(தோழிகள்) "நம் சிவபெருமானைப் பற்றி இதற்கு முன்பெல்லாம் எங்கள் முன்பு வந்து, 'கடவுள், ஆனந்தமயமானவன், அமுதமானவன்' என்று வாயால் புகழ்ந்து, இனிக்கப் பேசிய முத்துப் போன்ற வெண்ணகையுடைய பெண்ணே! இப்போது உன் வீட்டின் வாசல் கதவைத் திறப்பாய்!". (உறக்கத்தில் இருக்கும் பெண்) "முன்பே இறைவன் மேல் பற்றும் பழக்கமும் வைத்த பழமையான அடியவர்கள் நீங்கள்! புதிய அடியவளான எனது தவறைப் பொறுக்க மாட்டீர்களோ?". (தோழிகள்) "பெண்ணே! நீ சிவபெருமான் மீது கொண்ட அன்பை நாங்கள் அறிய மாட்டோமா? அவனைப் போற்றி நாமும் பாடலாம்' என்றே அழைக்கின்றோம்; எழுந்திரு!"