வழிபாடு

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் வருகிற 24-ந் தேதி ஆன்லைனில் வெளியீடு

Published On 2024-12-18 04:34 GMT   |   Update On 2024-12-18 04:34 GMT
  • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம்.
  • 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வைகுண்ட ஏகாதசி துவாரகா தரிசனம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து நேற்று அன்னமய்யா பவனில் முதன்மை செயல் அலுவலர் சியாமலா ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அவர் கூறியதாவது:-

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு 10 நாட்களுக்கான ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

இதேபோல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. நேரடி இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் வைகுண்ட ஏகாதசி 2 நாட்கள் முன்னதாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக திருப்பதியில் 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.

வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை டீ, காபி, பால், உப்புமா, சர்க்கரை பொங்கல், பொங்கல் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை சுவர்ண ரத்தின அலங்காரத்தில் ஏழுமலையான் அருள் பாலிப்பார்.

துவாதசி நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News