வழிபாடு
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று மாலை தொடங்குகிறது

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று மாலை தொடங்குகிறது

Published On 2025-03-30 09:55 IST   |   Update On 2025-03-30 09:55:00 IST
  • யாக பூஜைகளுக்காக கோவில் மண்டபத்தில் 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
  • வருகிற 1-ந்தேதி மாலை 4.35 மணிக்கு மேல் முதற்கால யாக வேள்வி தொடங்குகிறது.

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடைசியாக கடந்த 18.3.2013 அன்று கும்பாபிஷேகம் நடந்தது.

12 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன.

திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான விழா இன்று மாலை தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, கிராமசாந்தி பூஜை ஆகியவை நடக்கிறது.

நாளை (31-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள் மூத்த பிள்ளையார் வழிபாடு, நவகோள் வேள்வி, திருமகள் வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.

யாக பூஜைகளுக்காக கோவில் மண்டபத்தில் 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வருகிற 1-ந்தேதி மாலை 4.35 மணிக்கு மேல் முதற்கால யாக வேள்வி தொடங்குகிறது.

அன்று முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருளச் செய்தல், மூலாலயத்தில் இருந்து யாகாலயத்துக்கு திருக்குடங்கள் எழுந்தருளுதல் உள்ளிட்டவை நடக்கின்றன.

2-ந் தேதி காலை 2-ம் கால யாக வேள்வி, மாலை 3-ம் கால யாகவேள்வி, 3-ந் தேதி காலை 4-ம் காலயாக வேள்வி, மாலை 5-ம் கால யாகவேள்வி, 4-ந் தேதி காலை 4.30 மணிக்கு ஆறுமுகனுக்கு 6-ம் கால யாகவேள்வி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

தொடர்ந்து அன்று காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. காலை 8.30 மணிக்கு மருதாசல மூர்த்தி விமானம், ஆதிமூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் சமகால திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.

காலை 9.05 மணிக்கு ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீசுவரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேசுவரர் ஆகியோருக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், திருவீதி உலா, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளன.

கும்பாபிஷேகத்தை ஒட்டி ராஜகோபுரத்தின் மீது 8 அடி உயரம், 6 அடி அகலத்தில் ஓம் என்ற எழுத்தும், அதன் மீது 24 அடி உயரம், 8 அடி அகலத்தில் வேல் வடிவமும் எல்.இ.டி.யால் தயாரித்து பொருத்தப்பட்டு உள்ளது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், அறங்காவலர் குழுவினரும் செய்து வருகிறார்கள். அதிகாரிகள் கூறுகையில் கோவில் வளாகத்தில் உள்ள சன்னதிகளின் மண்டபங்கள் மீது சுமார் 750 பேரும், வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் நின்று கும்பாபிஷேகம் காண 1,500 பேரும் அனுமதிக்கப்படுவர்.

மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. யாக சாலை பூஜைகள் 50 சதவீதம் தமிழ் மொழியிலும், 50 சதவீதம் வழக்கமான முறையிலும் நடத்தப்படும். பக்தர்களின் வசதிக்காக படியில் மண்டபம் பகுதி உள்ளிட்ட இடங்களில் பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது என்றனர். 

Tags:    

Similar News