வழிபாடு

திருச்செந்தூரில் மாசித்திருவிழா: வெற்றிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த சண்முகர்

Published On 2025-03-09 11:00 IST   |   Update On 2025-03-09 11:00:00 IST
  • கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • இன்று மாலை சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

7-ம்திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார்.

அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைக்கு பிறகு மாலை 4.20 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

8-ம்திருவிழாவான நாளை(திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

12-ம்திருவிழாவான 14-ந்தேதி மாலையில் சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News