புலவர்விளைதேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா இன்று தொடங்குகிறது
- கொடை விழா இன்று தொடங்கி 3-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
- இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
நாகர்கோவில் புலவர்விளையில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை கொடை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 3-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று கணபதி ஹோமம், தேவி முத்தாரம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு பக்தர்கள் அம்மனுக்கு முளைப்பாரி வைத்தல், 6.30 மணிக்கு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, இரவு 8.30 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை போன்றவை நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 8 மணிக்கு சிறப்பு பூைஜகள் நடைபெறும்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, சமய சொற்பொழிவு, உச்சகால பூஜை, அன்னதானம், பக்தி பஜனை, வில்லிசை போன்றவை நடக்கிறது.
வருகிற 27-ந் தேதி காலை 9 மணிக்கு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், 30-ந் தேதி மாலை 3 மணிக்கு புள்ளிக்கோலம், ரங்கோலி கோலப்போட்டி, 1-ந் தேதி காலை 8 மணிக்கு பால்குட பவனி, 2-ந் தேதி மாலை 5 மணிக்கு ஒழுகினசேரி ஆற்றில் இருந்து கோவில் நோக்கி அம்மன் யானை மீது பவனி வருதல், பெண்கள் மாவிளக்கு ஏற்றி கோவிலை சுற்றி வலம் வருதல் போன்றவை நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 7 மணிக்கு அபிஷேக தீபாராதனை, 10 மணிக்கு வில்லிசை, மாலை 3 மணிக்கு அம்மன் நகர்வலம் வருதல், இரவு 8 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு தங்க பூந்தொட்டிலில் திருத்தாலாட்டு, 9 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும்.
இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 5-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 5 மணிக்கு பொங்கல் வழிபாடு, இரவு 7 மணிக்கு தேவி முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், 9 மணிக்கு சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை போன்றவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை புலவர்விளை ஊர் தலைவர் செல்வராஜன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.