வழிபாடு

நவதிருப்பதியில் அவதரித்த நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார்

Published On 2023-03-09 08:52 GMT   |   Update On 2023-03-09 08:52 GMT
  • நம்மாழ்வார் எனப்படும் மாறன் சடகோபன் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரில் பிறந்தார்.
  • நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு.

நம்மாழ்வார் எனப்படும் மாறன் சடகோபன் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரில் பிறந்தார். இவர் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழப்படுகிறார். கம்பர் இயற்றிய "சடகோபர் அந்தாதி" எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார்.

திருநெல்வேலி சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் பொற்காரியார் மற்றும் சேர நாட்டு திருவெண்பரிசாரத்தை ஆண்ட மன்னனின் மகளான உடைய நங்கைக்குத் திருமகனாக நம்மாழ்வார் கலி பிறந்த 43-வது நாளில் அவதரித்தார்.

இவர் பாண்டிய மரபினர் ஆதலால் மாறன் என்ற இயற்பெயரையும் மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியை விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் வென்றதால் "சடகோபன்" என்றும் மாறன் சடகோபன் எனவும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போலப்பரன் ஆகிய திருமாலைத் தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாகத் தன்னை வரித்துக் கொண்டுபாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.

பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி என்பவர் அயோத்தியில் இருந்தபோது தெற்குத் திசையில் ஓர் ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தென்திசை நோக்கிப் பயணித்தார். மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவரைச் சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு. மாறன் கண்விழித்த உடன் மதுரகவி ஆழ்வார் கேட்ட "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" கேள்விக்கு "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அளித்தார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு: திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி திருவாய்மொழி இவை ரிக், யசுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாகப் பெரி யோர்கள் சொல்வார்கள். இந்தத் திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 8 பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார்.

மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். தூத்துக்குடி மாவட்டத்தில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திரு நகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூரில் ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார் பிறந்த கி.மு. 798-இக்குச் சற்று முன் பிறந்தவர். நம்மாழ்வார்க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.

சிறுவயதிலிருந்தே செவிக்கினிய செந்தமிழில் நற்கவிதைகளைப் பாடிய காரணம் பற்றி இவருக்கு இச்சிறப்புப் பெயர் வந்தது.

இவர் வேத சாத்திரங்களை நன்கு பயின்றார். ஒரு காலகட்டத்தில் உலக விஷயங்களில் பற்று நீங்கி அயோத்தி, மதுரா, முதலிய வடநாட்டு திவ்ய தேசங்களைச் சேவிக்கச் சென்றார்.

அயோத்தியில் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவில் வெளியே வந்தபோது தெற்கே ஒரு பேரொளியைக் காணுற்று வியப்படைந்தார். மறுநாள் இரவிலும் அதே ஒளி அவ்வாறே தோன்றிற்று. உடனே மதுரகவிகள் 'தெற்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது; அதைச் சென்று காணவேண்டும்' என்று தீர்மானித்துத் தெற்கு நோக்கிப் புறப்பட்டார். அவ்வொளி தோன்றிய இடமாகிய திருக்குருகூரை அடைந்தார். புளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த அவ்வொளி யாகிய நம்மாழ்வாரைச் சமாதியி லிருக்கக் கண்டார். முதலில் ஒரு பெரிய கல்லைக் கீழே போட்டு அந்தசத்தத்தினால் அவர் சமாதியைக் கலைத்தார். மேலும் அவர் நிலையை அறிய விரும்பி "செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?" என்று வினவினார்.

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்"

என்று விடை வந்தது. இந்த வினா, விடை இரண்டிலும் தத்துவம் புதைந்துள்ளது. 'சூட்சுமமாயிருக்கும் ஜீவன் பிறப்பெடுத்தால் அதன் வாழ்வு எப்படி இருக்கும்?' என்பது கேள்வி. 'தன் புண்யபாவங்களின் பயன்களை நுகர்வதே அதன் வாழ்க்கையாக இருக்கும்' என்பதே விடை.

மதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக ரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.

ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம். அதில் ஓம் என்பது முதல் பதம். நமோ என்பது மையப்பதம். நாராயணாய என்பது மூன்றாவது பதம். இதில் ஓம் என்பது பகவானுக்கு அடிமைப் பட்டிருப்பதைச் சொல்கிறது. இரண்டாவது பதம் ஆச்சாரியனுக்குத் தொண்டு செய்வதை வலியுறுத்துகிறது. மதுரகவியின் பாசுரங்கள் திருமந்திரத்தின் மத்திய பதமாக எண்ணி அதைப் பிரபந்தத்தின் நடுவே வைத்துள்ளார்கள்.

Similar News