நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
- இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
- பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது. அன்றையதினம் விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, தனபூஜைகள் ஆகியவை நடந்தது. 3-ந்தேதி கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, லட்சுமி பூஜை ஆகியவை நடந்தது.
4-ந்தேதி காலை உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலையில் இருந்து பக்தர்கள் கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தன கருப்பு சாமி கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க தீர்த்தக்குடங்களை சுமந்தபடியும், முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் நத்தம் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தது. அதன் பின்னர் வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. 5-ந்தேதி காலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் 4, 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
7-ம் நாளான நேற்று காலையில் 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கரந்தமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடங்கள், காசி, ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர்கோவில் ஆகிய புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடங்கள் ஆகியவை கோவில் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் காலை 11.35 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓதி கோவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது அங்கு வந்த கருடன் கோபுரத்தை சுற்றி வானில் வட்டமிட்டது. இதைக்கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் அம்மனை வேண்டி வழிபாடு நடத்தினர்.
கும்பாபிஷேக விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.