வழிபாடு

நாடியம்மனுக்கு பொம்மைகள் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2023-04-11 12:59 IST   |   Update On 2023-04-11 12:59:00 IST
  • இன்று புஷ்பப் பல்லக்கில் நவநீத சேவையும், குதிரை வாகன காட்சியும் நடக்கிறது.
  • இந்திர விமானத்தில் வெள்ளி சிம்ம வாகனத்தில் நாடியம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் முக்கியமானதாகும். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா கடந்த மாதம் 28-ந் தேதி நாடியம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்று மூலஸ்தான கோவிலில் வைக்கப்பட்டிருந்தது.

விழாவையொட்டி தினந்தோறும் இன்னிசை நிகழ்ச்சியுடன் காலை மற்றும் இரவில் அம்மன் வீதி நடைபெற்று வந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாடியம்மனுக்கு வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது.முன்னதாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் வெள்ளி சிம்ம வாகனத்தில் நாடியம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

நேற்று அதிகாலை 4.40 மணியளவில் செட்டியார் தெருவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தலை அடைந்தது.அங்கு பொம்மைகள் நாடியம்மனுக்கு வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பட்டுக்கோட்டை நகரம், சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இன்று (செவ்வாய்க்கிழமை) கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற கிராம அலுவலர்கள் சங்கம் சார்பில் புஷ்பப் பல்லக்கில் நவநீத சேவையும்,இரவு குதிரை வாகன காட்சியும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையும், மண்டகப்படிதாரர்களும் செய்துள்ளனர்.

Similar News