வழிபாடு

சதுரகிரி கோவிலுக்கு இன்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி

Published On 2022-10-08 06:58 GMT   |   Update On 2022-10-08 06:58 GMT
  • சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
  • சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. நேற்று முதல் வருகிற 10-ந்தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையில் பீட் எண் 4 தாணிப்பாறை பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் நேற்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது.

பிரதோஷத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருகை தந்த பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிவதால் பக்தர்கள் நலன் கருதி அனுமதி இல்லை எனஅறிவிப்பு செய்ததோடு, அனுமதி இல்லாததால் தங்கள் ஊருக்கு திரும்பி செல்லுமாறு வனத்துறையினர் கூறினர்.

இதனால் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு. 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். புரட்டாசி மாதம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பீட் எண் 4, தாணிப்பாறை பகுதியில் உள்ள வல்லாளம்பாறை கூடாரம், இட்லி பாறை ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக தீப்பற்றி எரிந்து வந்தது. வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இந்நிலையில், நேற்று காலை குரங்கு பாறையிலும் பற்றி எரிந்த தீயையும் வனத்துறையினர் அனைத்தனர்.தீயின் காரணமாக இப்பகுதியில் இருந்த வன விலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன.

இந்த நிலையில் காட்டுத்தீ அணைக்கப்பட்டதால் இன்று முதல் 10-ந்தேதி வரை 3 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர். மேலும் தீ பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் எடுத்து செல்லக்கூடாது எனவும், தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News