பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மறுபூஜையுடன் குண்டம் விழா நிறைவு
- சப்பரத்தில் உற்சவ அம்மன் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பக்தர்கள் வேண்டுதலுக்காக கைகளில் சூலாயுதம் ஏந்தி வந்தனர்.
சத்தியமங்கலம் அருகே புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் விழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 5-ந் தேதி திருவிளக்கு பூஜையும், அம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தன. 6-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவமும் 7-ந் தேதி தங்க தேராட்டமும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் மறுபூஜை நடைபெற்றது. நடை திறப்பதற்கு முன்னதாகவே பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அம்மனை தரிசனம் செய்த பின்னர் குண்டம் அமைக்கப்படும் இடத்தில் உள்ள திருமண்ணை எடுத்து திருநீறாக பூசிக்கொண்டனர். பக்தர்கள் பலர் குழந்தை வரம் வேண்டி குண்டம் அருகே உள்ள கம்பத்தில் சிறிய மர தொட்டிலை கட்டினர்.
மறுபூஜையையொட்டி சப்பரத்தில் உற்சவ அம்மன் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க சப்பரத்தின் பின்னால் ஏராளமான பக்தர்கள் வேண்டுதலுக்காக கைகளில் சூலாயுதம் ஏந்தி வந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் கடையிலேயே சூலாயுதம் விற்கப்பட்டன. மறுபூஜையுடன் இந்த ஆண்டுக்கான பண்ணாரி மாரியம்மன் குண்டம் விழா நிறைவு பெற்றது.