பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்
- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர்.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்தும், பல அடி நீள அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர்.
பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் திருவுருவ படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியும் பாத யாத்திரையாக வந்தனர்.
கோவிலில் குவிந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனத்தில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் கோவில் கிரிபிரகாரத்தைச் சுற்றிலும் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர். பெண்கள் அடிபிரதட்சணம் செய்து வழிபட்டனர்.
திருச்செந்தூருக்கு வரும் தூத்துக்குடி ரோடு, பாளையங்கோட்டை ரோடு, பரமன்குறிச்சி ரோடு, குலசேகரன்பட்டினம் ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் சாரை சாரையாக பாத யாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் விழாக்கோலம் பூண்டது.