திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் 26-ம்தேதி தொடங்குகிறது
- 4-ந்தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
- 6-ந்தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் வருடந்தோறும் சித்திரை மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிகர் பிரம்மோற்சவம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கொடியேற்று விழா நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரவு அம்ச வாகனம், 27-ந்தேதி காலை பல்லக்கு, இரவு தங்கவிமானம், 28-ந்தேதி காலை சூரிய பிரபை, இரவு யாளி வாகனம், 29-ந்தேதி சந்திர பிரபை, 30-ந்தேதி வெள்ளி சிம்ம வாகனத்தில் சாமி வீதிஉலா நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. 5-ந்தேதி திருவோணம் நட்சத்திரத்தில் ரத்னாங்கி சேவை நடைபெற உள்ளது. அப்போது பெருமாள் சன்னதியில் உள்ள யோக நரசிம்மர் மற்றும் தேசிகர் ஆகியோர் மலையில் உள்ள லட்சுமி ஹயக்கிரிவர் சன்னதியில் எழுந்தருள்வார்கள். மேலும் அன்றைய தினம் விஜயதசமி என்பதால் விஜயதசமி அம்பு போடுதல், கண்ணாடி பல்லக்கு வீதி புறப்பாடும் நடைபெற உள்ளது. பின்னர் 6-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
முன்னதாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மகாளய அமாவாசை என்பதால் தேசிகர் சன்னதியில் பெருமாள், தாயார் எழுந்தருளி கண்ணாடி அறை உற்சவமும், நாளை மறுநாள் முதல் 9 நாள் நவராத்திரி உற்சவம் தொடங்கப்பட்டு, வருகிற 4-ந்தேதியுடன் முடிவடைகிறது.