வழிபாடு

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: தங்க முத்துக்கிடா வாகனத்தில் சுவாமி வீதி உலா

Published On 2023-02-28 09:01 IST   |   Update On 2023-02-28 09:01:00 IST
  • அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளினார்.
  • சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

3-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கோவில் சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மேலக்கோவிலை சேர்ந்தனர்.

மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

4-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News