திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது படிப்படியாக அதிகரிக்கப்படும்
- டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது
- திருப்பதியில் 18-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது.
திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று ேபசினார்.
அவர் பேசியதாவது:-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதில் முக்கிய நிகழ்ச்சியாக 24-ந்தேதி கஜ வாகன வீதிஉலா, 25-ந்தேதி கருட வாகன வீதிஉலா, 27-ந்தேதி தேரோட்டம், 28-ந்தேதி பஞ்சமி தீர்த்தம், 29-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது. பஞ்சமி தீர்த்தம் அன்று கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய வாய்ப்புள்ளதால், இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் தங்கும் விடுதி வளாகம் மற்றும் கோவிந்தராஜசாமி சத்திரம் 2-ல் இந்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதியில் இருந்து இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்களை வழங்க தொடங்கி உள்ளோம்.
சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் 25 ஆயிரம் டோக்கன்களும், மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் டோக்கன்களும் வழங்கி வருகிறோம். குறிப்பிட்ட ஒதுக்கீடு முடிந்ததும் கவுண்ட்டர்களை மூடுகிறோம். டோக்கன் பெறும் பக்தர் அதே நாளில் தரிசனம் செய்யலாம்.
டோக்கன் இல்லாத பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வந்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 2-ல் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் அமைதியாக காத்திருக்கலாம். அதற்கான நேரம் வரும்போது தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து தரிசன வரிசையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் விரைவு தரிசனம் வழங்கப்படுகிறது.
டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கும் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்து டைம் ஸ்லாட் டோக்கன்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிப்போம். ஆதாரை பதிவு செய்து டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கப்படுவதால், பக்தர்கள் தரிசனம் செய்தாலும் இல்லாவிட்டாலும் மாதம் ஒருமுறை மட்டுமே டோக்கன் பெற வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. காலை 8 மணியாக மாற்றி, ஒரு மாத காலம் ஒத்திகை முறையில் தரிசனத்துக்காக பக்தர்களை அனுமதிக்கிறோம்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இரவில் காத்திருக்கும் சாதாரணப் பக்தர்கள் அதிகாலையில் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்கிறோம். பக்தர்களின் கருத்துகளை பரிசீலனை செய்து உரிய முடிவெடுப்போம்.
டிசம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து திருப்பதியில் உள்ள மாதவம் தங்கும் விடுதியில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு ஆப் லைனில் பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வழங்க உள்ளோம். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்குவது திருமலையில் தங்கும் இடம் வாங்குவது குறையும்.
புனித தெலுங்கு கார்த்திகை மாதத்தில் உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி கடந்த 4-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் விஷ்ணு சம்பந்தப்பட்ட பூஜைகளை நடத்தி வருகிறோம். இந்தப் பூஜை நிகழ்ச்சிகளை ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்புகிறோம்.
திருப்பதியில் 18-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து வருகிற 23-ந்தேதி வரை திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோம மஹோற்சவம் நடத்துகிறோம்.
8-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதையொட்டி 8-ந்தேதி கோவில் கதவுகள் 11 மணிநேரம் மூடப்படுகிறது. இதனால் கோவிலில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம் உள்ளிட்ட சிறப்பு தரிசனங்கள் மற்றும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. கோவில் நடை திறந்ததும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
9-ந்தேதி தெலுங்கானா மாநிலம் ஓங்கோல், 12-ந்தேதி லண்டன், 13-ந்தேதி ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரத்தில் சீனிவாச கல்யாணம் நடக்கிறது.
முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டியின் அறிவுறுத்தலின்படி திருமலையை மாசு இல்லாத நகரமாக மாற்ற இலவச பஸ்களுக்கு பதிலாக (தர்ம ரதம்) மின்சாரப் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக ஓலக்ட்ரா நிறுவனம் ரூ.15 கோடி மதிப்பிலான 10 மின்சாரப் பஸ்களை வழங்க முன்வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.