உடற்பயிற்சி

இடுப்பு பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்கும் ஆஞ்சநேயாசனம்

Published On 2023-04-08 11:05 IST   |   Update On 2023-04-08 11:05:00 IST
  • முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
  • நுரையீரலைப் பலப்படுத்துகிறது.

ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுவதும் செலுத்த உதவுகிறது.

உடலின் முக்கியமான உறுப்பு தண்டுவடம். உடல் இயக்கத்துக்கு அடிப்படையான 33 நரம்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மூளை மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு இடையே உள்ள தகவல் பரிமாற்றத்துக்கு தண்டுவடம் அடிப்படையானது. உட்காருவது, நடப்பது, நிற்பது, பொருட்களை தூக்குவது போன்ற செயல்களின்போது நமது தோரணை சீரற்று இருப்பதால், தண்டுவடத்தில் பாதிப்புகள் ஏற்படும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் குணப்படுத்த முடியும்.

விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். வலது காலை முன் நோக்கி நகர்த்தி தரையில் பாதம் பதியும்படி ஊன்றிக்கொள்ளவும். பின்பு இடது காலை பின்னோக்கி கொண்டு சென்று, முழங்கால் தரையில் படுமாறு கிடைமட்டமாக வைக்கவும். பின்னர் இரண்டு கைகளையும் கூப்பி தலைக்கு மேல் நேராக தூக்கவும். இந்த நிலையில் முதுகுப் பகுதியை பின் நோக்கி வளைக்க வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வரலாம். இதைப் போன்று மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும்.

பலன்கள்: பெண்களுக்கு கை மற்றும் இடுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். வாகனத்தில் பயணித்தல் மற்றும் பணியிடத்தில் கணினி முன்பு நீண்ட நேரம் வேலை பார்க்கும்போது ஏற்படும் தண்டுவட பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. தோள்களை விரிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. உடலின் ஆற்றலை வளர்க்கிறது. இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இடுப்புப் பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது.

Tags:    

Similar News