null
நாய் கடித்துவிட்டதா? ரேபீஸ் வைரஸ் தாக்காமல் இருக்க உடனடியாக இதை செய்யுங்கள்...
- வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.
- மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும்.
நாய் கடித்துவிட்டால் நம்மில் பலர் உடனே மருத்துவமனைக்கு செல்வதையே முதலில் செய்கின்றனர். மருத்துவமனைக்கு சென்று ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவது முக்கியம்தான். ஆனால் அதற்கு முன்பு நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் முதல் ஒரு மணிநேரத்தில் நாம் செய்யும் விஷயங்கள்தான் நம் உயிரை காப்பாற்றும்.
நாய் கடித்தால் அது ரேபீஸ் பாதித்த நாயா அல்லது சாதாரண நாயா என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. நாய் கடித்த உடனேயே அருகில் எங்காவது டேப் (Tap) இருந்தால் அதனை திறந்து நாய் கடி காயங்களில் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டும். ஒரு நிமிடம் வெறும் தண்ணீரில் கழுவிய பின்னர், சோப்பை காயத்தின் மீது நன்கு தடவி பிறகு அதே போல தண்ணீரை விட்டு கழுவ வேண்டும். 15 நிமிடங்கள் இதனை செய்ய வேண்டும். ஒருவேளை சோப்பு இல்லாவிட்டால், வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.
நாய் பற்கள் பட்டு துளை போல காயம் ஏற்பட்டிருந்தால் அந்த காயத்துக்குள் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டியது அவசியம். அதன் பின்னர் டெட்டால் போன்றவற்றை காயத்தின் மீது ஊற்றி நன்றாக கழுவிவிட வேண்டும். இப்படி செய்யும் போது காயங்களின் மேற்பரப்பில் இருக்கும் ரேபீஸ் வைரஸ்கள் 80 சதவீதம் அழிந்துவிடும்.
இதையடுத்து, மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரமாக எடுக்கிறோமோ அந்த அளவுக்கு ரேபீஸ் கிருமியை நாம் அழித்துவிடலாம். அதன் பின்னர் மருத்துவர் கூறும் நாட்களில் சென்று அடுத்தடுத்து 3 டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நாய் கடி காயங்களுக்கு பொதுவாக தையல் போட மாட்டார்கள். காயம் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.