முடி அடர்த்தியாக வளர `வெங்காய ஹேர் மாஸ்க்'
- வெங்காயத்தில் கந்தகம் நிறைந்துள்ளது.
- இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வது நல்லது.
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும்.
முடி உதிர்வு, வறட்சியான முடி, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. ஆனால் இது போன்ற பிரச்சனைகளுக்கு பலரும் கடைகளில் விற்பனை செய்யப்படும் முடி பராமரிப்பு பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனினும், இதில் சில சமயங்களில் ரசாயனங்கள் கலந்திருப்பதால் முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
தலை முடி ஆரோக்கியத்திற்கு இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வது நல்லது. அந்த வகையில், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வெங்காயத்தை பயன்படுத்தலாம்.
அன்றாடம் நாம் உணவில் சேர்க்கப்படும் உணவுப்பொருளான வெங்காயம் முடி பராமரிப்புக்கு அற்புதமான நன்மைகளையும் வழங்குகிறது. இதில் தலைமுடியை ஆரோக்கியமாக வைப்பதற்கு வெங்காய ஹேர் மாஸ்க் தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளை பார்க்கலாம்.
தலைமுடிக்கு வெங்காய ஹேர் மாஸ்க் உதவுமா?
வெங்காயத்தில் கந்தகம் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையை சுத்தப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இந்த இயற்கையான மூலப்பொருள் முடி இழைகளுக்கு ஊட்டமளித்து, பலப்படுத்துகிறது.
மேலும் இது ஒட்டுமொத்த உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தலைமுடிக்கு வெங்காயத்தைப் பயன்படுத்துவது முடி அமைப்பை மேம்படுத்தவும் மற்றும் முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவுகிறது.
வெங்காயத்தில் வைட்டமின் சி, பி9, பி6 மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சல், பூஞ்சை வளர்ச்சி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இதற்கு வெங்காய சாறு அல்லது வெங்காய எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கைத் தலைமுடிக்கு பயன்படுத்துவது முடி இழைகளுக்கு மென்மையான பிரகாசத்தைத் தருகிறது. இதில் வெங்காய ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கான முறைகளைக் காணலாம்.
வெங்காயச் சாறு, கற்றாழை ஹேர் மாஸ்க்:
இந்த ஹேர் மாஸ்க்கிற்கு 2 தேக்கரண்டி அளவிலான கற்றாழை ஜெல்லை 2 தேக்கரண்டி வெங்காய சாறுடன் சேர்க்க வேண்டும்.
பின்னர் இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை 30-40 நிமிடங்கள் வைத்து, பிறகு தலைமுடியைக் கழுவ வேண்டும்.
இதற்கு வெங்காயம் சேர்க்கப்பட்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்வு செய்யலாம். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம்.
வெங்காயச் சாறு, தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்:
தேங்காய் எண்ணெயுடன் வெங்காயச் சாறு சேர்க்கப்பட்ட ஹேர் மாஸ்க் முடியின் இழைகளை நீரேற்றம் செய்ய வேண்டும்.
இதற்கு தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் 2 தேக்கரண்டி அளவிலான வெங்காயச் சாறு சேர்க்கலாம்.
இப்போது இந்த கலவையை முடியில் தடவி, குறைந்தது 30 நிமிடங்கள் வைத்துக் கொள்ளலாம்.
பின்னர் ஷாம்பு மற்றும் கண்டிஷனரைக் கொண்டு தலைமுடியை அலசலாம். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
வெங்காய சாறு, தேன் ஹேர் மாஸ்க்:
இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது முடியின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, முடியின் மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது. எனவே இது முடி சேதம் மற்றும் வறட்சியைத் தடுக்க உதவுகிறது.
இதற்கு ஒரு தேக்கரண்டி அளவிலான தேனுடன் அரை கப் புதிய வெங்காய சாற்றை சேர்த்து ஹேர் மாஸ்க்கை உருவாக்கலாம்.
இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். முடியில் இந்த கலவையை 15 நிமிடங்கள் வைத்து, பிறகு லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவ வேண்டும். இந்த கலவையை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.
இஞ்சி, வெங்காய சாறு ஹேர் மாஸ்க்:
இந்த ஹேர் மாஸ்க்கானது அழற்சி எதிர்ப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முடி வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.
இந்த கலவையைத் தயார் செய்ய இஞ்சி மற்றும் வெங்காயச் சாற்றை சம அளவு எடுத்து நன்கு கலக்கி தலைமுடிக்குத் தடவலாம்.
பின்னர் இதை உச்சந்தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதை மிதமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவும் முன், சுமார் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும்.
நாள்தோறும் இந்த ஹேர் பேக்கைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு முடியை ஆரோக்கியமாக வைக்கவும், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும் இது போன்ற பல்வேறு வழிகளில் வெங்காய ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.