திருவெண்ணெய்நல்லூர் அருகே மர்மமான முறையில் ஏரியில் இறந்து கிடந்த 1.5 டன் மீன்கள்
- நீரில் விஷம் கலக்கப்பட்டதா ? போலீசார் விசாரணை
- ஏரியில் நீர் குறைவாக இருந்ததால் வெப்பம் தங்காமல் மீன்கள் இறந்ததா,
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஜூன் மாதம் மழவராயநல்லூர், பள்ளத் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 75) என்பவர் மீன் வளர்ப்பதற்கு குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏரியில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் நேற்று காலை 7 மணியளவில் ஏரிக்கு சென்று பார்த்தார். அப்போது ஏரியில் ஏராளமான ஜிலேபி, கட்லா மற்றும் இதர கெண்டை வகை என சுமார் 1.5 டன் மதிப்பிலான மீன்கள் நீரில் இறந்தும், கரை ஒதுங்கியும் கிடந்தது. வேறுசில வகை மீன்கள் நல்ல நிலையில் ஏரியில் உள்ளது. இது சம்பந்தமாக ஏரியின் குத்தகைதாரர் நாராயணசாமி திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யாரேனும் நீரில் விஷம் கலந்தனரா, அல்லது ஏரியில் நீர் குறைவாக இருந்ததால் வெப்பம் தங்காமல் மீன்கள் இறந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். ஏரியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதற்காக தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.