செய்திகள்

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆக வேண்டும் - நடிகர் மோகன்பாபு விருப்பம்

Published On 2018-08-28 09:58 GMT   |   Update On 2018-08-28 09:58 GMT
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக வேண்டும் என்று தெலுங்கு நடிகர் மோகன்பாபு கூறியுள்ளார். #MKStalin #DMK

சென்னை:

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகச்சி கடந்த 25-ந்தேதி தி.மு.க. சார்பில் கோவையில் நடந்தது.

இதில், தெலுங்கு நடிகர் மோகன்பாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெருமைகள் குறித்து நினைவு கூர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து மோகன் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்துக்கு என்னை அழைத்ததற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இனிவரும் நாட்களில் மு.க.ஸ்டாலினுக்கு நன்மையே நடக்கவேண்டும் என விரும்புகிறேன். விரைவில் அவரை தமிழகத்தின் முதல்-அமைச்சராக பார்க்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மோகன்பாபு ரஜினி காந்தின் 40 ஆண்டுகால நண்பர். ரஜினி தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்று நடிகர் மோகன்பாபு வாழ்த்தி இருப்பது தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News