அதிகாலை முதல் பஸ்கள் இயக்கம்- தென் மாவட்டங்களுக்கு குறைவான பயணிகளே சென்றனர்
சென்னை:
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று 2-வது அலை கடந்த மாதம் முதல் வேகமாக பரவி வருகிறது.
தினந்தோறும் கொரோனா பரவல் புதிய உச்சத்தை தொடுகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி விட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.
இரவு நேர ஊரடங்கு காரணமாக இரவில் பஸ் மற்றும் தனியார் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக இந்த பஸ்கள் அதிகாலை மற்றும் காலை நேரங்களில் இயக்கப்படுகின்றன.
அதன்படி சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இன்று அதிகாலை முதல் பஸ்கள் புறப்பட்டு சென்றன. தென் மாவட்டங்களுக்கு இரவு 8 மணிக்குள் சென்றடையும் வகையில் அதிகாரிகள் திட்டமிட்டு பஸ்களை இயக்கி வருகிறார்கள்.
நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, கம்பம் ஆகிய ஊர்களுக்கு இன்று அதிகாலை 5 மணி முதல் பஸ்கள் புறப்பட்டு சென்றன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்பட்டன. ஒரு பஸ்சில் குறைந்த பட்சம் 20 பயணிகள் சேர்ந்ததும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு சென்றன.
பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கண்டக்டர்கள் எந்த ஊருக்கு பஸ் செல்கிறது என்பதை சொல்லி கூவி கூவி பயணிகளை அழைத்து சென்றனர். கொரோனா பரவல் அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளதால் அவர்கள் வெளியூர் பயணத்தை தவிர்ப்பதாக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தெரிவித்தனர்.
குடும்பமாக சொந்த ஊருக்கு செல்பவர்கள் யாரும் இன்று பஸ்சில் பயணம் செய்ய வரவில்லை. கல்லூரி மாணவர்களும், கொரோனா அச்சத்தால் சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்களுமே இன்று பஸ்சில் பயணம் செய்ய வந்தனர்.
கோயம்பேட்டில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில் ஆகிய தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் காலை 9.30 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டன. மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மதியம் 1 மணி வரை இயக்கப்படுகின்றன.
திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் பகல் 2 மணி வரை இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், வேலூர், ஆரணி உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மாலை 4 மணி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அனைத்து ஊர்களுக்கும் புறப்பட்டு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் இன்று முதல் காலை நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையத்தின் 6 நடைமேடைகளில் இருந்தும் பஸ்கள் புறப்பட்டு சென்றன.
முக கவசம் அணிந்து வந்த பயணிகள் மட்டுமே பஸ் ஏற அனுமதிக்கப்பட்டனர். கோயம்பேடு பஸ் நிலையம் வந்த அனைத்து பயணிகளுக்குமே காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்று மட்டும் பஸ்கள் கிடையாது.
ஏற்கனவே இரவு நேர பஸ்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்கள் விரும்பிய நேரத்தில் பயணம் செய்ய டிக்கெட் மாற்றி வழங்கப்பட்டது. பயணம் செய்ய விரும்பாதவர்கள் டிக்கெட்டை ரத்து செய்து விட்டு பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர்.
அதே போல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களும் இன்று அதிகாலை முதல் புறப்பட்டு சென்றன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் இன்று ஓரளவு கூட்டம் இருந்தது.