இந்தியா

வயநாடு நிலச்சரிவு- அதி தீவிர பேரிடராக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல்

Published On 2024-12-30 15:19 GMT   |   Update On 2024-12-30 15:19 GMT
  • வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன.

கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதி பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

இந்த நிலச்சரிவால் கேரள மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும் கடும் துயரத்திற்கு உள்ளானது.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன. தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது.

இதற்கிடையே, வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு வலியுறுத்தி வந்தது. அதனை ஏற்க மத்திய அரசு மறுத்து வந்தது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இருப்பினும், பேரிடராக அறிவித்த மத்திய அரசு கேரள மாநிலத்திற்கான சிறப்பு நிதியுதவி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News