சபரிமலையில் சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு 16-ந்தேதி வரை முடிந்தது
- உடனடி முன்பதிவு அடிப்படையில் சன்னிதானத்துக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டுகிறது.
- இன்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவனந்தபுரம்:
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் (டிசம்பர்) 30-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதம் மேற்கொண்டு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
பக்தர்களை அனுமதிக்கும் விஷயத்தில் மண்டல பூஜையை போன்றே கடைபிடிக்கப்படுகிறது. மெய் நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) மூலமாக 70 ஆயிரம் பேரையும், உடனடி முன்பதிவு மூலமாக 10 ஆயிரம் பேரையும் அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
அதன்படி தினமும் ஆன்லைனில் முன்பதிவு செய்த 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் உடனடி முன்பதிவு அடிப்படையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்திருந்தாலும், அதற்கு மேல் பக்தர்கள் வருகிறார்கள்.
அவர்களும் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். விடுமுறை நாட்களில் உடனடி முன்பதிவு அடிப்படையில் சன்னிதானத்துக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டுகிறது.
இந்தநிலையில் மகர விளக்கு பூஜை காலத்தில் வருகிற 16-ந்தேதி வரை சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. 17 முதல் 19-ந்தேதிக்கான முன்பதிவு நடந்து வருகிறது. ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டதால் உடனடி முன்பதிவு மூலமாக சாமி தரிசனம் செய்ய அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள்.
இதனால் இன்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அதிகளவில் வருவதால், அதற்கு தகுந்தாற்போல் பதினெட்டாம் படியில் பக்தர்களை போலீசார் வேகமாக அனுப்பினர்.