கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதே எங்களது நோக்கம்- பிரதமர் மோடி
- விவசாயிகளுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில் விவசாய கடன் தொகை 3.5 மடங்கு அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கிராமப்புற பாரத திருவிழா 2025-யை தொடங்கி வைத்தார்.
கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோரின் உற்சாகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் இத்திரு விழா நடத்தப்படுகிறது. 'வளர்ச்சியடைந்த பாரதம்-2047-க்காக நெகிழ்வுத்தன் மையுடன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்' என்ற கருப்பொருளுடன் திருவிழா 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தொழில்முனைவோர் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் பங்கேற்ற கை வினை கலைஞர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேலும் கண்காட்சியை பார்வையிட்டார்.
2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த மாபெரும் நிகழ்வு இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை அறிமுகப்படுத்துகிறது. இது ஒரு அடையாளத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் பிரசாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
கிராமங்களை வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் துடிப்பான மையங்களாக மாற்றுவதன் மூலம் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதே எங்களது நோக்கம்.
லட்சக்கணக்கான கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடி நீர் வந்து கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், நாட்டின் சிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை கிராமங்களுடன் இணைத்து, டெலிமெடிசின் பலனைப் பெறுகிறார்கள்.
கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்த, கிராமத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மனதில் கொண்டு பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்படுவது மிகவும் அவசியம்.
கடந்த 10 ஆண்டுகளில், எங்கள் அரசு கிராமத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சிறப்பான கொள்கைகளை உருவாக்கி முடிவுகளை எடுத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் விவசாய கடன் தொகை 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயத்தை மேம்படுத்த பல கொள்கைகள் அமல் படுத்தப்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2011-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது கிராம மக்களின் வாங்கும் திறன் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது. கிராம மக்கள் முன்பை விட அதிகமாக செலவு செய்கிறார்கள். தேவைகளை வாங்குவதற்கான செலவின திறன் அதிகரித்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.