இந்தியா

சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் இருந்த பிரசாந்த் கிஷோர் கைது

Published On 2025-01-06 07:33 IST   |   Update On 2025-01-06 07:34:00 IST
  • பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
  • பிரசாந்த் கிஷோரை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் தேர்வாணைய பணியாளர் வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பூதாகாரமாக வெடித்துள்ளது. இதையடுத்து, இந்தத் தேர்வை ரத்து செய்யக் கோரி ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பிரசாந்த் கிஷோர் தொடங்கினார். இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் பிரசாந்த் கிஷோரை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.



தற்போது அவர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பிரசாந்த் கிஷோர் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

உண்ணாவிரத போராட்டம் இருக்கும் நிலையில், தனக்கு சிகிச்சை வழங்கக்கூடாது என்று பிரசாந்த் கிஷோர் திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும், திட்டமிட்டப்படி சாகும் வரை தனது உண்ணாவிரதம் தொடரும் என்று கூறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 



பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற இடத்தில் பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே மோதல் வெடித்தது. 

Tags:    

Similar News