திபெத் நிலநடுக்கத்தில் 126 பேர் பலி: இந்திய அரசு இரங்கல்
- திபெத் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படை விரைந்து சென்றது.
புதுடெல்லி:
திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணிக்கு திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின.
இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், திபெத் நிலநடுக்கத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரமான உயிர் மற்றும் உடைமை இழப்புகளுக்கு இந்திய அரசும் மக்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.