44 நாளாக விவசாய தலைவர் உண்ணாவிரதம்.. குடியரசு தினத்தில் நாடு முழுவதும் விவசாயிகள் டிராக்டர் பேரணி
- 44 வது நாளாக விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
- உடல்நிலை மோசமடைந்துள்ள போதிலும் பஞ்சாப் அரசு வழங்கும் மருத்துவ உதவியையும் அவர் மறுத்துவிட்டார்.
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் டிராக்டர் அணிவகுப்பை அறிவித்துள்ளனர்.
44 வது நாளாக விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த பேரணி போராட்டம் அறிவிக்கப்பட்டது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமான உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லைகளுக்கு இடையே விவசாயிகள் கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைமையில் விவசாயிகள் டெல்லி நோக்கி பலமுறை செல்ல முயன்றனர். ஆனால் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் அவர்களை கலைத்தனர். எனவே பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் புள்ளிகளில் முகாமிட்டுள்ளனர்.
விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்[70 வயது], நவம்பர் 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். உடல்நிலை மோசமடைந்துள்ள போதிலும் பஞ்சாப் அரசு வழங்கும் மருத்துவ உதவியையும் அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான் விவசாயிகள் குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணியை அறிவித்துள்ளனர்.
முன்னதாக கடத்த 2021 செப்டம்பரில் மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பல சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் பொருளாதாரத்தை நவீனமயமாக்க இந்த சட்டங்கள் அவசியம் என்று அரசு கூறினாலும் , இந்த சீர்திருத்தங்கள் பெரிய நிறுவனங்களின் தயவில் இருக்கும்படி விவசாயிகள் தள்ளப்படுவதாக கூறி அவர்கள் போராட்டத்தை துவங்கினர்.
அவர்களின் ஒரு வருட போராட்டத்தின் பலனாக நவம்பர் 2021 இல் விவசாய சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன. 2021 குடியரசு தினத்தை ஒட்டியும் செங்கோட்டையை முற்றுகையிட விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது போலீஸ் உடனான மோதலில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.