காதல் திருமணம் செய்த சகோதரி மகள்.. ஆத்திரத்தில் உணவில் விஷம் கலந்த தாய்மாமன் தலைமறைவு
- விஷம் கலப்பதை மண்டபத்தில் இருந்த சிலர் பார்த்துள்ளனர்.
- தலைமறைவான மகேஷ் பாட்டீல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் கொள்ளும் மணமக்களை பழிவாங்கும் போக்கு காலம்காலமாக நடைபெற்று வருகிறது. தனது விருப்பத்தை மீறி திருமணம் செய்தால் மகன் அல்லது மகள் என்றும் பாராமல் ஆணவக் கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இருதரப்பினருக்கு இடையே முன்விரோதம் காரணமாக மோதல் என பல்வேறு குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களால் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கு தான் இழப்பு இருக்கும். ஆனால், மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்வோ இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு உள்ளது.
தனது விருப்பத்தை மீறி சகோதரி மகள் காதல் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் இருந்த தாய் மாமன், திருமண வரவேற்பு நிகழ்வில் தயாரிக்கப்பட்ட உணவில் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தாய்மாமனான மகேஷ் பாட்டீல் எதிர்ப்பை மீறி சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சமைக்கப்பட்ட உணவில் விஷம் கலந்துள்ளார்.
இவர் விஷம் கலப்பதை மண்டபத்தில் இருந்த சிலர் பார்த்துள்ளனர். இதனால் விஷம் கலந்த உணவை யாரும் சாப்பிடவில்லை. இதையடுத்து மகேஷ் பாட்டீலை அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டனர். எனினும், அவர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார். தலைமறைவான மகேஷ் பாட்டீல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.