இந்தியா

சீமானை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்: இருதரப்பினர் மோதல்- கல்வீச்சு

Published On 2025-01-09 12:15 IST   |   Update On 2025-01-09 12:25:00 IST
  • ஆதாரம் கேட்கப் போவதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவிப்பு.
  • ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசி எதிர்கோஷம் எழுப்பினர்.

புதுச்சேரி:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் பேசும்போது, பெரியாரை விமர்சித்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார்.

இதற்கு திராவிடர் இயக்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் இன்று புதுவை நெல்லித்தோப்பில் உள்ள கீர்த்தி மகாலில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர் சீமான் காலை 11 மணிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. புதுவைக்கு வரும் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெரியார் பற்றி அவர் கூறிய கருத்துக்களுக்கு ஆதாரம் கேட்கப் போவதாக புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்திருந்தனர்.

இதன்படி இன்று காலை 10.30 மணியளவில் நெல்லித்தோப்பு சுப்பையா சிலை சதுக்கம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஒன்று கூடினர். இந்த போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார். துணை தலைவர் இளங்கோ, பொதுச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு ஐயப்பன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, திராவிடர் கழகம் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


சுப்பையா சிலை சதுக்கத்திலிருந்து கீர்த்தி மகாலை நோக்கி முன்னேற முயன்றனர். அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியினர் மணிமேகலை பள்ளி அருகே சீமானை வரவேற்க ஒன்று கூடியிருந்தனர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசி எதிர்கோஷம் எழுப்பினர்.


இருதரப்பினரையும் மோதிக் கொள்ளாமல் இருக்க பேரிகார்டு வைத்து போலீசார் தடுத்தனர். போலீசாரை தள்ளிவிட்டு இருதரப்பினரும் முன்னேற முயன்றனர். இதில் சிலர் செருப்பு, கற்களை வீசினர். ஒரு கட்டத்தில் போலீசார் இருதரப்பையும் நெட்டித்தள்ளினர்.

திராவிடர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் கொடிகளை பிடுங்கி கிழித்து எறிந்தனர். சீமான் உருவப்படத்தை அவமதிப்பு செய்தனர்.


இதையடுத்து போலீசார் திராவிடர் இயக்கத்தினரை குண்டுக்கட்டாகத் தூக்கி வேன், பஸ்களில் ஏற்றி அவர்களை அப்புறப்படுத்தினர்.


சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.


Tags:    

Similar News