இந்தியா

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழப்பு- பவன் கல்யாணை கடுமையாக விமர்சித்த ரோஜா

Published On 2025-01-09 16:14 IST   |   Update On 2025-01-09 16:14:00 IST
  • இந்த விவாகரத்தில் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.
  • லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா?

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்கான சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் நேற்று விநியோகம் செய்யப்பட்டது.

இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என வருவாய்த்துறை மந்திரி அங்கனி சத்ய பிரசாத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, "புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்ததைப் போல, திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திலும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இந்த விவாகரத்தில் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.

திருப்பதி லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து பவன் கல்யாண் ராஜினாமா செய்வாரா?

பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News