இயேசு கிறிஸ்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ.விற்கு நீதிமன்றம் சம்மன்
- பாஜக எம்.எல்.ஏ. ரேமுனி பகத், 'இயேசு கிறிஸ்து' குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இயேசு கிறிஸ்து குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்த பாஜக பெண் எம்எல்ஏ மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக வரும் 10 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி, ஜாஷ்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தெக்னி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ. ரேமுனி பகத், 'இயேசு கிறிஸ்து' மற்றும் 'மதமாற்றம்' குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் ஜாஷ்பூரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி அவருக்கு எதிராக புகார் அளித்தனர். ஆனால் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சாட்சியங்களின் வாக்குமூலம் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. பேசிய வீடியோவை ஆராய்ந்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ராய்முனி பகத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாக என்று தனது உத்தரவில் கூறியது.
மேலும், இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் பாஜக எம்.எல்.ஏ. ரேமுனி பகத் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.