இந்தியா

VIDEO: கெஜ்ரிவாலை மீண்டும் கொண்டு வருவோம்.. ஆம் ஆத்மி தேர்தல் பிரசார பாடல் வெளியீடு

Published On 2025-01-07 16:23 IST   |   Update On 2025-01-07 16:23:00 IST
  • ஃபிர் லயேங்கே கெஜ்ரிவால் என்று அந்த பாடல் தொடங்குகிறது.
  • பாடலை வெளியிட்ட கெஜ்ரிவால், டெல்லி மக்களுக்கு இது ஒரு பண்டிகையாகும் என்று தெரிவித்தார்.

தலைநகர் டெல்லிக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாஜக காங்கிரஸ் என இரு பக்கமும் எழுந்துள்ள போட்டியை சமாளித்து கடந்த 10 ஆண்டுகால ஆட்சியை ஆம் ஆத்மி தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுபான கொள்கை வழக்கில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கைதாகி செப்டம்பரில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அமைச்சராக இருந்த அதிஷி முதலமைச்சர் ஆனார். மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ளாமல் தான் முதலமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன் என்று கெஜ்ரிவால் சபதம் எடுத்தார்.

இந்நிலையில் தற்போது தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆம் ஆத்மி பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் பிரசார பாடலை கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.

ஃபிர் லயேங்கே கெஜ்ரிவால் [கெஜ்ரிவாலை மீண்டும் கொண்டுவருவோம்] என்று அந்த பாடல் தொடங்குகிறது.

அந்த பாடலில் சுகாதாரம், கல்வித் துறையில் ஆம் ஆத்மி அரசின் பணிகள், குடிமக்களுக்கு இலவச தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற நலத்திட்டங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

பெண்களுக்கு மாதம் ரூ. 2,100 வழங்கும் முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சையை உறுதி செய்யும் சஞ்சீவனி யோஜனா உள்ளிட்டவையும் பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ளன.

பாடலை வெளியிட்ட கெஜ்ரிவால், டெல்லி மக்களுக்கு இது ஒரு பண்டிகையாகும் என்று தெரிவித்தார்.

இந்தப் பாடல் ஹிட் ஆகும். எங்களின் கோஷம் 'ஃபிர் லாயேங்கே கெஜ்ரிவால்', இந்தப் பாடலும் அதையே உணர்த்துகிறது. இந்தப் பாடல் ஒவ்வொரு வீட்டையும் சென்றடையும், மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்வார்கள் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறினார். 

Tags:    

Similar News