கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் - குடியரசு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்
- ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய 'வரிசை வளாகத்தை' ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
- சமத்துவத்தின் பார்வையில் விஐபி கலாச்சாரத்திற்கு இந்த சமூகத்தில் இடமில்லை
விஐபி தரிசனம் என்ற எண்ணமே தெய்வீகத்திற்கு எதிரானது என்பதால், விஐபி தரிசன கலாச்சாரத்தை கோயில்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று குடியரசு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய 'வரிசை வளாகத்தை' குடியரசு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். இந்த வசதி 'ஸ்ரீ சாநித்யா' என்று அழைக்கப்படுகிறது.
இதனையடுத்து உரையாற்றிய ஜக்தீப் தன்கர், "ஒருவருக்கு முன்னுரிமை அளித்து விவிஐபி அல்லது விஐபி என்று முத்திரை குத்துவது சமத்துவம் எனும் கருத்தை இழிவுபடுத்துகிறது. சமத்துவத்தின் பார்வையில் விஐபி கலாச்சாரத்திற்கு இந்த சமூகத்தில் இடமில்லை. கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை அகற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி மலையில் விஐபி கலாச்சாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.