இந்தியாவில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்.. 1 கோடி பேருக்கு பயிற்சி
- 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி மக்களுக்கு AI திறன்கள் குறித்து நிறுவனம் பயிற்சி அளிக்கும்.
- திரு. சத்யா நாதெல்லா, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் இந்தியாவில் 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது.
நாட்டின் செயற்கை நுண்ணறிவு (AI) திறன் மற்றும் அதன் சொந்த Azure கிளவுட்-கம்ப்யூட்டிங் சேவைகள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது.
இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த முதலீடு அறிவிப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advanta(I)ge India என்ற முன்னெடுப்பு மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி மக்களுக்கு AI திறன்கள் குறித்து நிறுவனம் பயிற்சி அளிக்கப் போகிறது என்றும் நாதெல்லா தெரிவித்துள்ளார்.
முன்னதாக சத்யா நாதெல்லா பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, " திரு. சத்ய நாதெல்லா, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லட்சியமிக்க விரிவாக்கம் மற்றும் முதலீட்டு திட்டங்கள் பற்றி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது சந்திப்பின்போது, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்தது சிறப்பானதாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கு முன், சத்யா நாதெல்லா, தெலுங்கானா முதல்வர் ரவந்த் ரெட்டியையும், டி ஸ்ரீதர் பாபு மற்றும் உத்தம் குமார் ரெட்டி உள்ளிட்ட அவரது கேபினட் அமைச்சர்களுடன், டிசம்பர் 30, 2024 அன்ற ஐதராபாத்தில் சந்தித்து, மாநிலத்தில் நிறுவனத்தின் தற்போதைய முதலீடுகள் குறித்து விவாதித்தார்.