சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை: அரசு சாலை ஒப்பந்ததாரர் கைது - விசாரணையில் வெளிவந்த உண்மை
- ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தர் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் செய்தி வெளியிட்டார்
- இருவரும் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து, சிமெண்டால் மூடினார்.
சத்தீஸ்கரை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர், முகேஷ் சந்திரகர் [33 வயது]. இவர் கடந்த புத்தாண்டு தினத்தன்று காணாமல் போனார். கடந்த வெள்ளிக்கிழமை பிஜப்பூர் மாவட்டத்தில் அரசு சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முகேஷ் சமீபத்தில் பிஜப்பூரில் நடந்த அரசு சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்டார்.
இந்த ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தர் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் என்பரிடம் சில நாட்களுக்கு முன் முகேஷ் எடுத்த பேட்டியில் பல கேள்விகளை கேட்டிருந்தார். இதனைதொடர்ந்தே சுரேஷுக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் முகேஷின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் முகேஷ் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக கருதப்படும் முக்கிய குற்றவாளி சுரேஷ் சந்திரகர் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] இரவு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு சாலை ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் என நம்பப்படுகிறது. கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததில் இருந்து அவர் தலைமறைவானார். சுரேஷ் சந்திரகர் ஐதராபாத்தில் உள்ள தனது ஓட்டுநர் வீட்டில் பதுங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 200 சிசிடிவிகளில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்து கிட்டத்தட்ட 300 மொபைல் எண்களைக் டிரெஸ் அவுட் செய்து சுரேஷை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, சுரேஷ் சந்திரகாருடன் தொடர்புடைய நான்கு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன், அவருக்குச் சொந்தமான சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிட முகப்பு பகுதி இடித்துத் தள்ளப்பட்டது. சத்தீஸ்கரின் கன்கேர் மாவட்டத்தில் சுரேஷ் சந்திரகரின் மனைவியும் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, முகேஷ் சந்திரகர் கனமான பொருளால் தாக்கப்பட்டுள்ளார்.அவரது தலை, மார்பு, முதுகு மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. கையில் குத்தியிருந்த பச்சை மூலமே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.
கொலை செய்யப்பட்ட முகேஷ் சந்திரகர் மற்றும் சுரேஷ் சந்திரகர் தூரத்து உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் ரித்தேஷ், மகேந்திர ராம்தேகே மற்றும் தினேஷ் சந்திரகர் என்ற மூவரும் பிஜப்பூரில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ரித்தேஷ் மற்றும் மகேந்திரா ஆகியோர் முகேஷை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இருவரும் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து, சிமெண்டால் மூடினார். முகேஷின் போன் மற்றும் அவரை கொன்ற இரும்பு கம்பியையும் அப்புறப்படுத்தினர். இவை அனைத்தும் சுரேஷின் திட்டப்படி நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
என்டிடிவி உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவங்களின் பங்களிப்பு நிருபராகவும் சுயாதீன பத்திரிகையாளராகவும் செயல்பட்டு வந்த முகேஷ் கொலைக்கு பத்திரிகையாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.