இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 சிறப்பு விசாக்கள்- மத்திய அரசு அறிமுகம்
- ‘ஸ்டடி இன் இந்தியா’ என்ற இணையதளத்தை தொடங்கி உள்ளது.
- தகுதியுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு ‘இ-ஸ்டூடண்ட்’ விசா அளிக்கப்படும்.
புதுடெல்லி:
இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்காக 'இ-ஸ்டூடண்ட்', 'இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்' என்ற 2 சிறப்பு பிரிவு விசாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. 'ஸ்டடி இன் இந்தியா' என்ற இணையதளத்தையும் தொடங்கி உள்ளது.
இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள், முதலில் அந்த இணையதளம் மூலமாக, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிப்பது கட்டாயம் ஆகும். அதற்கான சேர்க்கை கடிதம் கிடைத்த பிறகு, அவர்கள் விசாவுக்கு அதற்கான இணையதளத்தில் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு 'இ-ஸ்டூடண்ட்' விசா அளிக்கப்படும். அவர்களை சார்ந்தவர்களுக்கு 'இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்' விசா அளிக்கப்படும். படிப்பின் கால அளவை பொறுத்து, 5 ஆண்டுகள் வரை விசா வழங்கப்படும். அதன்பிறகு அதை நீட்டித்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.