தன் அப்பாவையே மாற்றியவர் அதிஷி.. பிரியங்கா காந்தியின் கன்னத்தை வர்ணித்த பாஜக வேட்பாளர் மீண்டும் சர்ச்சை
- மர்லினா தனது தந்தையை மாற்றினார். இது ஆம் ஆத்மி கட்சியின் தன்மையைப் பிரதிபலிக்கிறது
- பாஜக தலைவர்கள் வெட்கமின்மையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்
தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக - காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் முதல்வர் அதிஷியின் கல்காஜி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா நிற்கிறார். மேலும் நேற்று முன்தினம் பாஜக 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
ரமேஷ் பிதுரி
அதன்படி கல்காஜி தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி போட்டியிட உள்ளார். இவர் இதற்கு முன்னர் 3 முறை எம்எல்ஏ-வாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூட்டோடு சூடாக பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி, தனக்கு வாக்களித்தால், பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்ற சாலைகளை அமைப்பேன் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார். தற்போது அது அடங்குவதற்குள் டெல்லி முதல்வர் அதிஷி குறித்து பேசியுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிதுரி, மார்லினாவாக இருந்த அதிஷி இப்போது சிங். தன் தந்தையை கூட மாற்றிவிட்டார் என்று கூறினார்.
இந்த மர்லினா (அதிஷி) சிங் ஆனார். அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டார். ஊழல் நிறைந்த காங்கிரஸுடன் இணைய மாட்டேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது குழந்தைகள் மீது சத்தியம் செய்தார், ஆனால் மர்லினா தனது தந்தையை மாற்றினார். இது ஆம் ஆத்மி கட்சியின் தன்மையைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
இந்நிலையில் அதிஷி மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பாஜக தலைவர்கள் வெட்கமின்மையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாக கெஜ்ரிவால் அதில் பதிவிட்டுள்ளார்.
'பாஜக தலைவர்கள் வெட்கமின்மையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டனர். டெல்லி முதல்வர் அதிஷி ஜியை பாஜக தலைவர்கள் தவறாகப் பேசி வருகின்றனர். பெண் முதலமைச்சரை அவமதிப்பதை டெல்லி மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இதற்கு டெல்லி பெண்கள் அனைவரும் பழிவாங்குவார்கள்' என கெஜ்ரிவால் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அதிஷியின் பெயர்
அதிஷியின் முழு பெயர் அதிஷி மார்லெனா சிங் [Atishi Marlena Singh] என்பதாகும். மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் ஞாபகமாக மார்லேனா என்ற பெயரை பெற்றோர்கள் அவருக்கு சூட்டியுள்ளனர். 2018 இல் தனது பெயரில் உள்ள மார்லேனா வை அதஷி நீக்கியுள்ளார்.
தனது வேலையைப் பார்த்து மக்கள் தன்னை தீர்மானிக்க வேண்டும் என்றும் தனது பின்புலத்தை [கமியூனிச] வைத்து தீர்மானித்துவிடக் கூடாது என்பதற்காக பொது உபயோகத்தில் இருந்து மார்லேனவை நீக்கியதாக அதிஷி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.