இந்தியா

டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ரெயில் சேவை: பிரதமர் மோடி 26-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

Published On 2025-01-02 09:06 GMT   |   Update On 2025-01-02 09:06 GMT
  • ரூ.37,012 கோடி மதிப்பீட்டில் டெல்லி- பாரமுல்லா இடையே ரெயில் சேவைக்கான பணிகள் தொடங்கப்பட்டது.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதி மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

ஸ்ரீநகர்:

டெல்லியில் இருந்து காஷ்மீர் பாரமுல்லாவுக்கு இது வரை நேரடி ரெயில் சேவை இல்லை. தற்போது பாரமுல்லா முதல் சங்கல் தான் (ரம்மன் மாவட்டம்) வரை தான் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் ரூ.37,012 கோடி மதிப்பீட்டில் டெல்லி- பாரமுல்லா இடையே ரெயில் சேவைக்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதன் மொத்த தூரம் 272 கி.மீட்டர் ஆகும். உதம்பூர்-ஸ்ரீநகர்- பாரமுல்லாவை இணைக்கும் வகையில் இந்த ரெயில் வழித்தடம் அமையும். கடந்த சில ஆண்டுகளாக புதிய தண்டவாளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் துரிதமாக நடந்து வந்தது.

17 கி.மீட்டர் தூரம் கத்ரா-ரியாசி இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த பகுதியில் வருகிற 6 மற்றும் 7-ந்தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்த இருக்கிறார்.

இந்த வழித்தடத்தில் வைஷ்ணவி கோவில் அடிவாரத்தில் மலையை குடைந்து 3.2 கி.மீ.தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப ரீதியாக பல்வேறு சிரமங்கள் இருந்ததால் இந்த சுரங்கப்பாதையை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது மின் வசதி கொடுப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த பணிகளும் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இந்த பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

இந்த பணிகள் திட்டமிட்டபடி முடிந்தால் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று டெல்லி- காஷ்மீர் பாரமுல்லா இடையே இந்தியாவின் முதல் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைப்பார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சேவையால் வடக்கு காஷ்மீரில் இருக்கும் பாரமுல்லாவில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு ரெயில் சேவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதி மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

இந்திய ரெயில்வே வரலாற்றில் இந்த சேவை ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பயணிகள் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு பகலில் மட்டுமே இந்த ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரெயில்களை பாதுகாப்பாக இயக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக வடக்கு ரெயில்வே பொதுமேலாளர் அசோக் குமார் வர்மா தெரிவித்தார். தொடக்க விழாவுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

முன்னதாக வருகிற 6-ந்தேதி ஜம்மு ரெயில்வே கோட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

Tags:    

Similar News