மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 24-வது அகில இந்திய மாநாடு: அரசியல் தலைவர்கள், திரைக்கலைஞர்கள் பங்கேற்பு
- 2-ந்தேதி முதல் 5 நாட்கள் நடக்கிறது.
- பொதுக்கூட்டம் பாண்டி கோவில் அருகே நடைபெற உள்ளது.
மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் மற்றும் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயன், பிருந்தா காரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டின் முதல் நாளான 2-ந்தேதி காலை பொது மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா. சி.பி.ஐ. (எம்எல்) விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியார், ஆர்.எஸ்.பி. பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியார், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவ ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசுகின்றனர்.
சி.பி.எம். எம்.எல்.ஏ.வும், வரவேற்பு குழு தலைவருமான கே.பாலகிருஷ்ணன் வரவேற்கிறார். வரவேற்பு குழு செயலாளர் சு.வெங்கடேசன் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
முன்னதாக 1-ந்தேதி தமுக்கம் மைதானத்தில் கட்சியின் வரலாற்று கண்காட்சி, பாசிசத்தின் கோர முகங்களை வெளிப்படுத்தும் கண்காட்சி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்த கண்காட்சி, புத்தக கண்காட்சி போன்றவைகள் அங்கு அமைக்கப்பட உள்ளது.
இந்த கண்காட்சியை மூத்த பத்திரிக்கையாளர்கள் தோழர் என்.ராம், பரமேஸ்வரன் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள். அன்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் போற்றப்படுகிற மற்றும் ஆக்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகளின் சுடர் பெறப்படுகிறது.
குறிப்பாக சென்னையில் இருந்து சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவுச் சுடர், சேலம் சிறை தியாகிகள் நினைவுச் சுடர், கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவுச்சுடர், மாணவத் தியாகிகள் சோமசுந்தரம் செம்புலிங்கம் நினைவுச் சுடர், மதுரை தியாகிகள் நினைவுச் சுடர், அதேபோல மாநாட்டில் ஏற்றப்பட உள்ள வெண் மணி தியாகிகள் நினைவு கொடி பிரசார இயக்கமாக எடுத்து வரப்பட உள்ளது.
இந்த நினைவுச் சுடர் அனைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களால் 1-ந்தேதி மாலை பெறப்படுகிறது.
2-ந்தேதி காலை மேற்குவங்க மூத்த தலைவர் பீமன் பாசு கொடியேற்றி வைக்கிறார். அன்று மாலையில் இருந்து ஒவ்வொரு நாளும் தமிழகத்தினுடைய தலைசிறந்த கலை குழுக்கள் மற்றும் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும்.
திரைக்கவிஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கங்கள் தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மாநாடு நிறைவு பெறும் 6-ந்தேதி மாலை 25 ஆயிரம் செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது.
அன்று மாலை தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் பாண்டி கோவில் அருகே நடைபெற உள்ளது.
தமுக்கம் மைதானத்தில் 2-ந்தேதி நடைபெறும் கருத்தரங்க நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குனர்கள் ராஜூமுருகன், சசிகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
3-ந்தேதி மாலை கூட்டாட்சி கோட்பாடு இந்தியாவில் வலிமை என்ற மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் கேரளா முதல்வர் பினராய் விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
4-ந்தேதி மாலை நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 5-ந்தேதி மாலை நடிகை ரோகினி வழங்கும் ஒரு ஆள் நாடகம் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் திரைப் பட இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ஞானவேல் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர்.
6-ந்தேதி வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரளா முதல் மந்திரி பினராய் விஜயன், ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
முன்னதாக பாண்டி கோவில் அருகில் இருந்து துவங்கும் அணிவகுப்பை 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்க உள்ளனர். மாநாட்டையொட்டி அதற்கான அழைப்பிதழை மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டார்.