நெல்லையில் 4-வது நாளாக மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் உயர்வு
- தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை.
- சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
நெல்லை:
மாலத்தீவு அருகே நீடித்த காற்று சுழற்சியானது வங்க கடல் ஈரப்பதத்தை தென் தமிழகத்தின் ஊடாக இழுப்பதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. தொடர்ந்து, மழை பெய்வதால் முக்கிய ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று 4-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நெல்லை மாநகர பகுதிகளில் சந்திப்பு, தச்சநல்லூர், தாழையூத்து, டவுன், பாளையங்கோட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
மாநகர பகுதிகளின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மழை காரணமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, நாங்குநேரி, பாபநாசம் ஆகிய பகுதிகளிலும் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்து, கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.03 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 80.80 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 93.57 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 86.35 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 7 அடி உயர்ந்துள்ளது.
மணிமுத்தாறு அணைப்பகுதியில் 23.8 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 48 மில்லி மீட்டரும், சேர்வலாரில் 42 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு சுமார் 1,900 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கு சுமார் 675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து 1,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் 123 மில்லி மீட்டர் (12.3 சென்டி மீட்டர்) மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தேமாங்குளம் 117 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 106 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களில் 96 இடங்களில் மிதமான மழையும், 17 இடங்களில் கனமழையும், 2 இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஊத்தில் 79 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 74 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 67 மில்லி மீட்டர், மாஞ்சோலை யில் 60 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.