பெரியமேடு மைலேடி பூங்கா நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது மாணவன் பலி
- பயிற்சியாளர்களான செந்தில், சுமன் ஆகியோர் நீச்சல் குளத்தில் 15 சிறுவர்களுக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தனர்.
- திடீரென சிறுவன் தேஜா தண்ணீரில் மூழ்கினான்.
சென்னை:
சென்னை கொசப்பேட்டை பட்டாளம் ஹாஜி முகமது அப்பாஸ் தெருவை சேர்ந்த வர் ராகேஷ்குப்தா. இவரது மகன் தேஜா (வயது7).
வேப்பேரி அகர்வால் வித்யாலயா பள்ளியில் தேஜா 2-ம் வகுப்பு படித்து வந்தான். பெரியமேட்டில் உள்ள மைலேடி பூங்கா நீச்சல் குளத்துக்கு தினமும் சென்று தேஜா நீச்சல் கற்று வந்தான்.
நேற்று மாலை 6 மணி அளவில் தனது தாத்தாவுடன் சிறுவன் நீச்சல் குளத்துக்கு சென்றான். பின்னர் நீச்சல் குளத்தில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டான். பயிற்சியாளர்களான செந்தில், சுமன் ஆகியோர் நீச்சல் குளத்தில் 15 சிறுவர்களுக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து தேஜாவும் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டான்.
அப்போது திடீரென சிறுவன் தேஜா தண்ணீரில் மூழ்கினான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயிற்சியாளர் செந்தில் நீரில் மூழ்கிய தேஜாவை மீட்டு வெளியில் கொண்டு வந்தார். உடனடியாக மோட்டார்சைக்கிளில் வைத்து அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவன் தேஜாவை மயங்கிய நிலையில் கொண்டு சேர்த்தனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் தேஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று தேஜாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இது தொடர்பாக பெரிய மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவன் உயிரிழப்புக்கு நீச்சல் பயிற்சியாளர்களின் கவனக்குறைவு காரணமா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் சிறுவனின் உயிரிழப்புக்கு கவனக்குறைவு காரணமாக இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நீச்சல் பயிற்சிக்கு சென்ற இடத்தில் சிறுவன் தேஜா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவனது உறவினர்கள் மற்றும் பள்ளி நண்பர்கள், ஆசிரியர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.