ஆடி மாதம் தொடக்கம்- அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
- பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது.
- புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
திருவள்ளூர்:
அம்மனுக்கு உகந்த ஆடிமாதம் இன்று தொடங்கி உள்ளது. இதையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருகிறார்கள். இதனால் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. தொடர்ந்து 14 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.
இன்று ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று இரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் பெரிய பாளையம் வந்தனர். இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
பக்தர்களின் வசதிக்காக ரல்லபாடி, வடமதுரை கூட்டுச்சாலை, ஆத்துப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது.
ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விரதம் இருந்து கோவிலில் நீராடி அம்மனை வணங்கினர்.
சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். ஏராளமான கர்ப்பிணி பெண்கள் கோவில் வளாகத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
இதேபோல் திருவேற்காடு, மாங்காட்டில் உள்ள அம்மன் கோவில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.