உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

அதிமுக அலுவலக மோதல் வழக்கு- ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 70 பேருக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

Published On 2022-07-26 01:05 IST   |   Update On 2022-07-26 01:05:00 IST
  • விசாரணை நடைபெற்று வருவதால் முன் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு.
  • இரு தரப்பு மோதலில் ரூ.19,35,834 மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாக தகவல்.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே நிகழ்ந்த மோதல் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200பேர், ஒ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் என மொத்தம் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 43 பேரும், ஒ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் முன் ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

அதிமுக இரு தரப்பு மோதலில் ரூ.19,35,834 மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜராம், விருகை ரவி, தியாகராயநகர் சத்யா, அசோக் உள்ளிட்ட 43 பேர் மற்றும் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் 27 பேர் என மொத்தம் 70 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News