திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் கைப்பிடி சுவர் சேதம்
- கடந்த 4-ந்தேதி முதல் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
- இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இன்று இந்த கண்ணாடி பாலத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள கைப்பிடி சுவரில் "திடீர்" என்று சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகும் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.