உள்ளூர் செய்திகள்

அரியலூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி

Published On 2023-05-22 12:46 IST   |   Update On 2023-05-22 12:46:00 IST
  • அரியலூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்
  • ஆனால் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இதுவரை புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை

அரியலூர்,

அரியலூர் பேருந்து நிலையம் கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, புதிய பேருந்து நிலைய கட்டிடங்கள் கட்ட ரூ.7.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாலும், இதன் பணிகள் முடிய 18 மாதங்கள் உத்தேசிருப்பதாலும், தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர் - திருச்சி புறவழிச்சாலையில், வாணி திருமணமண்டபம் எதிர்புறம் உள்ள தனியார் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

தற்காலிக பேருந்து நிலையம் என்றாலும் ஒன்றரை வருடங்கள் தொடர்ந்து இங்கு செயல்பட உள்ளது. ஆனால் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இதுவரை புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடை, குடிநீர், மின்விளக்கு, ஏடிஎம் என்று அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் அரியலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம், திருச்சி, தஞ்சை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் மாதாகோவில், சத்திரம், அண்ணாசிலை வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வரவேண்டும். சேலம், பெரம்பலூர், திட்டக்குடி பார்டர் மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் மேம்பாலம், சத்திரம், அண்ணாசிலை வழியாக தற்காலிக பேருந்துநிலையம் செல்ல வேண்டும். தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் அரியலூர், நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்லவேண்டும். மேலும் ஆட்டோ வாடகை கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதோடு, தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் நகருக்குள் சென்று வர நகர பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News